செவ்வாய், 17 ஜனவரி, 2012

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! விண்டோஸ் காட்சி அமைப்பு

Posted On Jan 17,2012,By Muthukumar
கம்ப்யூட்டர் திரையில் தோற்றமளிக்கும் காட்சியை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இதற்கு விண்டோஸ் சிஸ்டம், அது எந்த பதிப்பாக இருந்தாலும், நமக்கு உதவிடுகிறது. மாற்றுவதற்கு நமக்கு உதவிடும் பல கூறுகளை இங்கு பார்க்கலாம்.
டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து பெறலாம். இதனையே கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அங்கு Appearance and Themes பிரிவில் display கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு செல்கையில் Display Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் செட்டிங்ஸ் அமைக்க Themes, Desktop, Screen Saver, Appearance மற்றும் Settings என்னும் ஐந்து பிரிவுகள் தரப்பட்டிருக்கும். இதில் எந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் Apply அல்லது OK என ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டிலும் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.
தீம்ஸ் (Themes) : தீம் என்பது ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேன்ஞ் மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
டெஸ்க்டாப் (Desktop): இந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப்பிற்கான பேக்ரவுண்ட் எனப்படும் பின்னணியில் தெரியும் படத்தை அமைக்கலாம். அந்த விண்டோ வில் கொடுத்துள்ள படங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆன்லைனில் சென்று ஏதேனும் படம் ஒன்றை எடுத்து அமைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள படங்களையும் பேக்ரவுண்ட் படமாக அமைக்கலாம். அது உங்கள் போட்டோவாகவோ அல்லது கார்ட்டூன் கேலிச் சித்திரமாக வோ இருக்கலாம். இந்த விண்டோ மட்டுமின்றி இத்தகைய பட பைல்கள் அல்லது இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் உங்கள் மனதைக் கவரும் படங்கள் ஆகியவற்றில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Set as Desktop Background என்பதில் கிளிக் செய்தும் பேக்ரவுண்டை அமைக்கலாம். Desktop Items என்ற விண்டோவினைப் பெற இங்கு Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இதில் General மற்றும் Web என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இதில் General பிரிவில் எந்த ஷார்ட் கட் ஐகான்கள் டெஸ்க்டாப்பில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது Desktop Cleanup என்னும் வசதியைப் பயன்படுத்தி அடிக்கடி பயன்படுத்தாத ஷார்ட்கட் ஐகான்களை எடுத்துவிடலாம். இந்த ஷார்ட் கட் ஐகான்களை எடுப்பதனால் அவை இயக்கிக் கொண்டு வரும் புரோகிராம்களுக்கு எந்த பாதிப்பு வராது. புரோகிராம்களுக்கான குறுக்கு வழிகளை எடுக்கிறோம், அவ்வளவுதான்.
அடுத்ததாக Screen Saver என்னும் பிரிவு. இந்த பிரிவில் ஸ்கிரீன் சேவராக எந்த காட்சி வர வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது நீங்களே ஒரு காட்சியை உருவாக்கி பயன் படுத்தலாம். நீங்கள் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும் குறிப்பிட்ட காலத்தில் (நிமிடங்கள்) இயக்காமல் இருந்தால் ஸ்கிரீன் சேவர் இயக்கப்பட்டு காட்சி அளிக்கும். இணையத்தில் அழகான பல ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை நம்பகமான தளங்களில் உள்ளனவா என்று பார்த்து இறக்கிப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட அழகான ஸ்கிரீன் சேவர்களுடன் வைரஸ் அல்லது உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடும் பிஷிங் புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில்இறங்கிவிடும். விண்டோஸ் புரோகிராமிலேயே உள்ள ஸ்கிரீன் சேவர் களைப் பயன்படுத்துவதே நல்லது. பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்ற மளிக்கும் என முன்காட்சியாகக் காட்டப் படும். அதனைப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் அதனையே தேர்ந்தெடுத்து அமைக்கலாம். ஸ்கிரீன் சேவரே தேவை யில்லை என்றாலும் அதற்கான பிரிவைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறலாம்.
இதே விண்டோவில் Power settings என்ற பிரிவில் நீங்கள் கம்ப்யூட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் மானிட்டருக்கு வரும் மின் சப்ளையை நிறுத்தவும் பின் நீங்கள் இயங்கத் தொடங்கியவுடன் இயக்கவும் செட் செய்திடலாம்.
அப்பியரன்ஸ் (Appearance): இந்த பிரிவுதான் உங்கள் டெஸ்க்டாப்பின் மிடுக்கான தோற்றத்தினை செட் செய்திடும் பிரிவாகும். இதில் விண்டோவின் ஸ்டைல் மற்றும் கலரை செட் செய்திடலாம். விண்டோவில் காட்டப்படும் பட்டன்கள் மற்றும் எழுத்துக்களின் அளவினை செட் செய்திடலாம். இந்த பிரிவில் கிடைக்கும் கீழாகச் செல்லும் அம்புக் குறியினை அழுத்தி பல்வேறு செட்டிங்குகளைப் பார்க்கலாம். அதில் எது உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என்பது அருகில் கட்டத்தில் காட்டப்படும். அது பிடித்துப் போனால் அதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எழுத்தின் அளவு (Font size) என்பது பலருக்கும் பயன்படும் ஒரு வசதி. விண்டோவில் காட்டப்படும் எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இன்னும் சற்று பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் இதனை மாற்றி செட் செய்திடலாம். இன்னும் கூடுதலாக இரண்டு வகைகள் உண்டு. அவை: Large Fonts மற்றும் Extra Large Fonts. இன்னும் பல மாற்றங்களை இதில் மேற்கொள்ளலாம். Advanced என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்டோ, அதன் பார்டர், ஐகான் அளவு மற்றும் மெனுக்கள் எப்படித் தோன்ற வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.
செட்டிங்ஸ் (Settings): இந்த டேப் தரும் பிரிவில் ஸ்க்ரீன் ரெசல்யூசன் மற்றும் கலரின் தன்மையை செட் செய்திடலாம். ரெசல்யூசன் என்பது திரையில் எத்தனை பிக்ஸெல்களில் வண்ணம் தரப்பட வேண்டும் என்பதாகும். எந்த அளவிற்கு அதிகமாக ரெசல்யூசனில் இதனை செட் செய்கிறோமோ அந்த அளவிற்கு திரை யின் தோற்றம் தெளிவாகக் கிடைக்கும். கூடுதலான ரெசல்யூசன் உங்களுக்கு அதிக அளவில் திரை இடத்தைக் கொடுக்கும். ஆனால் இதனால் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் மிகச் சிறியதாக இருக்கலாம். எனவே எழுத்துவகையினைப் பெரிதாக்கி ஐகான்களையும் பெரியதாக அமைக்கலாம். உங்களுடைய மானிட்டரில் எந்த அளவிற்கு ரெசல்யூசனை கூடுதலாக வைக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே வைக்க முடியும். பல ரெசல்யூசன்களில் வைத்து சோதனை செய்து பார்த்து எது உங்களுக்கு நிறைவாக இருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம். Color quality ஆப்ஷன் எப்போதும் Highest (32 bit) என்ற அளவில் வைக்கப்பட வேண்டும். உங்களுக்கு டிஸ்பிளே பிரச்னைகள் இருந்தால் Troubleshoot என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அங்கு தீர்வுகள் கிடைக்கும். இதே விண்டோவில் இருக்கும் Advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது General, Adapter, Monitor, Troubleshoot, Color Management என்ற டேப்களுடன் விண்டோ ஒன்று காட்டப்படும்.
General: கூடுதலான ரெசல்யூசனில் திரைக் காட்சி அளவை செட் செய்திருந்தால் இங்கு உள்ள DPI (dots per inch) செட்டிங்ஸ் மூலம் டெக்ஸ்ட் உட்பட அனைத்து ஸ்கிரீன் சமாச்சாரங்களையும் பெரிதாகக் காட்டலாம்.
Adapter: இந்த பிரிவு உங்களுடைய கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் கார்டு குறித்த தகவல்களைக் கொடுக்கும். இதில் உள்ள Properties என்ற பிரிவில் கிளிக் செய்தால் அப்போது பயன்பட்டுக் கொண்டிருக்கும் டிரைவர் சாப்ட்வேர்கள் அனைத்தும் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
Monitor: மானிட்டர் திரை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ரெப்ரெஷ் ரேட்டை இங்கு அதிகப்படுத்தலாம். குறைவான ரெப்ரெஷ் ரேட் இருந்தால் அதனால் கண்களுக்குக் கெடுதல் வருமாதலால் இந்த புதுப்பிக்கும் ரேட்டினை அதிகமாக வைத்தல் நல்லதுதான். இந்த திரையில் Hide modes that this monitor cannot display என்று இருப்பதனை டிக் செய்திட வேண்டும். அதன் பின் ஆரோ அழுத்தி மெனுவினை விரித்து அதிக பட்ச ரெப்ரெஷ் ரேட்டினை அமைக்கவும். எல்.சி.டி. திரைகளுக்கு இந்த பிரச்னை இல்லை.
Troubleshoot: இதில் உள்ள Hardware acceleration slider ஐப் பயன்படுத்தி கிராபிக்ஸ் கார்ட் செயல்பாட்டை மாற்றலாம்.
Color Management: டிசைனர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் பலவகையான கலர் திட்டங்களை அமைக்க இந்த பிரிவு உதவுகிறது. கடைசியாக உள்ள டேப் உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்டிற்கான செட்டிங்ஸ் அமைப்புகளை அமைக்க உதவுகிறது. இதனை ட்யூன் செய்வதற்கான வழிகளை அந்த கிராபிக்ஸ் கார்ட் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பெற வேண்டும். அவ்வப்போது அந்நிறுவனம் இந்த கார்டுக்கென வழங்கும் மேம்படுத்தப் பட்ட டிரைவர் புரோகிராம்களை டவுண்லோட் செய்து சிஸ்டம் பைல்களுடன் சேர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக