வியாழன், 1 மே, 2014

கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்


Posted: 1 May 2014 By Muthukumar
பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். 

ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். 

இது போலவே தான், நம் வீட்டில் செயல்படும் வண்ணத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகளையும் பராமரிக்கிறோம். பல வேளைகளில், கண்ணாடியில் படிந்துள்ள கறைகளைப் போக்கும் சொல்யூசன்களைப் பஞ்சு அல்லது துணியில் நனைத்து, இந்த திரைகளைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். 

இது சரியா? இல்லை எனில் சரியான வழி என்ன என்று இங்கு பார்க்கலாம். கீழே என்ன என்ன வழிகளை மேற்கொள்ளலாம்; எவற்றை மேற்கொள்ளக் கூடாது எனத் தரப்பட்டுள்ளது.


மேற்கொள்ளக் கூடாதவை: 

ஏரோசால் எனப்படும் கிளீனர் சொல்யூசன்களைத் திரையின் மீது ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யக் கூடாது. சிறிய அளவில் வெதுவெதுப்பான நீர் தவிர வேறு எதனையும் கொண்டு, திரைகளைச் சுத்தம் செய்தல் அதற்கு தீங்கு விளைவிக்கும். 

இது தவிர எந்த வேறு ஒரு திரவத்தினையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு திரவத்தினையும் நேரடியாகத் திரை மீது தெளித்தலும் கூடாது. 

சுத்தம் செய்திட கனமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. திரையில் எளிதில் நீங்காத கறை இருந்தால், அதனை நம் நகம் அல்லது கூரான வேறு சாதனம் பயன்படுத்தி நீக்கக் கூடாது. 


மேற்கொள்ளக் கூடியவை: 

மெல்லிய, உலர்ந்த, கறை எதுவும் இல்லாத, முடிந்தால் மைக்ரோ பைபர் இழையிலான துணி கொண்டு தான், இந்த வகை திரைகளைச் சுத்தம் செய்திட வேண்டும். தேவை ஏற்பட்டால், நீர் மற்றும் மென்மையான சோப் கலந்த நீர் கொண்டு சுத்தம் செய்திடலாம். 

முதலில் உலர்ந்த மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்திடவும். இதற்கு சில அழுக்குகள் போகவில்லை என்றால், இரண்டு தனி துணிகளை எடுத்துக் கொள்லவும். 

சிறிய அளவில் மென்மையான சோப் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு துணியை இதில் சிறிய அளவில் நனைத்து திரையைச் சுத்தம் செய்திடவும். 

பின்னர், அதனையே நீரில் சோப் நீங்கும் அளவிற்கு அலசி, பின்னர் நன்றாகப் பிழிந்து, அதனைக் கொண்டு சுத்தம் செய்திடவும். இறுதியாக, உலர்ந்த இன்னொரு துணியைக் கொண்டு சுத்தம் செய்திடவும். 

ஐ பேட் போன்ற சாதனங்களின் திரையைச் சுத்தம் செய்திடவும் இந்த வழிகளைப் பின்பற்றலாம்.