வெள்ளி, 20 ஜனவரி, 2012

செயற்கை உயிர்களை உருவாக்கும் `உயிரணு மென்பொருள்’



மனித வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிப்போன கம்ப்யூட்டரில் உள்ள மென்பொருள் (சாப்ட்வேர்) இயங்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (ஓ.எஸ்.) எனப்படும் அடிப்படை மென்பொருள் தேவை. இந்த ஓ.எஸ். உதவியுடன் அந்த கம்ப்யூட்டரில் உள்ள மென்
பொருட்கள் இயங்குகின்றன. அதுபோல நமது உடலில் உள்ள `செல்'களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதாவது உயிரணு மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக செயற்கை உயிரியல் ஆய்வாளர்கள்.
`அட, அப்படியா? இது நல்லாயிருக்கே' என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும் இந்த அரிய கண்டு பிடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது செயற்கை உயிரியல் என்னும் அதிநவீன அறிவியல் துறை. இந்த துறை பற்றிய ஒரு சிறு புரிதலுடன் நாம் உயிரணு சாப்ட்வேரை பற்றி தெரிந்துகொள்வோம்.
அமீபா, பாக்டீரியா போன்ற ஒரு செல் (உயிரணு) உயிரிகள்தான் உலக உயிர்கள் அனைத்திற்கும் மூதாதையர். நுண்ணுயிர்களான இவற்றில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியால் ஒரு செல் (உயிரி) இரண்டாகி, இரண்டு மூன்றாகி மனிதன் வரை
யிலான பல செல் உயிரிகள் உருவாகின.
உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் அடிப்படையான உயிரணுக்களை சோதனைக்கூடத்தில் உருவாக்கி, செயற்கை உயிரினங்களை உருவாக்க வேண்டும் என்பதே சிந்தடிக் பயாலஜி என்னும் `செயற்கை உயிரியல்' துறையின் நோக்கம். அமெரிக்க ஆய்வாளர் கிரெய்க் வெண்டரால் சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட `சிந்த்தியா' தான் உலகின் முதல் `ஒரு செல்' செயற்கை உயிரினம்.
சிந்த்தியாவுடன் தொடங்கிய இத்துறையின் ஆய்வு முயற்சிகள் விஞ்ஞானிகளை நம்ப முடியாத சந்தோஷத்தில் ஆழ்த்திய அதேசமயம், மத ஆர்வலர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தது. விளைவு, சிந்த்தியாவுக்கு பிந்தைய ஆய்வு முயற்சிகள் சோதனைக்கூட எல்லைக்குள்ளேயே முடங்கிப்போயின.
சோதனைக்கூடத்துக்குள் முடங்கியிருந்த செயற்கை உயிரியல் துறைக்கு, புத்துணர்ச்சியூட்டி புதுவாழ்வு அளித்திருக்கிறது உயிரணுக்களின் ஓ.எஸ் என்று சிலாகிக்கப்படும் உயிரணு சாப்ட்வேரின் வருகை!
உயிரணுக்களை தேவைக்கேற்ப மாற்றி, அவற்றை நம் தினசரி வாழ்க்கை பயன்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் `வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ற' உயிரணுக்களாக மாற்றி அமைக்கும் திறனுள்ளது `உயிரணு சாப்ட்வேர்'. இன்னும் எளிமையாகச் சொல்வதானால், உயிரணுக்களின் பாகங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யாமலேயே அவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்து புதிய வகை உயிரணுக்களை உருவாக்குவதே உயிரணு சாப்ட்வேரின் வேலை.
இந்த உயிரணு சாப்ட்வேரைக் கொண்டு உயிரணுக்களை நம் தேவைக்கேற்ப `புரோகிராம்' செய்வதன் மூலம், ஒரே உயிரணுவை வெவ்வேறு விதமான பணிகளை செய்யும் உயிரணுக்களாக மாற்றிவிட முடியும். அதாவது, ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு ஒரே கம்ப்யூட்டரை பல விதமான பணிகளை செய்ய வைப்பதைப் போல!
இந்த முயற்சியின் முதற்கட்டமாக, ஒரு செல் உயிரியான இ கோலி (ணி. நீஷீறீவீ) பாக்டீரியாவை உயிரணு சாப்ட்வேரைக் கொண்டு புரோகிராம் செய்ய தொடங்கியுள்ளார்கள். இந்த முயற்சி வெற்றி அடைந்தால், பல உயிரணுக்களை சுலபமாக புரோகிராம் செய்து அந்த புரோகிராம்களின் களஞ்சியம் ஒன்று உருவாக்கப்படும். இதன்மூலம் தற்போது ஆமை வேகத்தில் நகரும் செயற்கை உயிரியல் கண்டுபிடிப்புகளை பல மடங்கு அதிகரிக்கலாம்.
இந்த கண்டுபிடிப்புகளைக் கொண்டு தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வு காண முடியுமென்கிறார்கள் செயற்கை அறிவியல் துறை விஞ்ஞானிகள்.
உதாரணமாக, சுற்றுச்சூழலில் கலந்துள்ள தேவையற்ற கார்பனை காற்றிலிருந்து பிரித்தெடுத்து அகற்றுதல், சுற்றுச்சூழல் சீற்றங்களால் உருவாகும் ஆபத்தான வேதியல் பொருட்களை பாதுகாப்பாக அகற்றுதல், குடிநீரிலிருந்து மாசுகளை அகற்றுதல், உடலுக்குள் ஊடுருவிச் செல்லும் நோய்க்கிருமிகளை தாக்கி அழித்தல், உணவுப்பயிர்களை பூச்சித் தாக்குதலிலிருந்து பாதுகாத்தல் ... என `வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ற' உயிரணுக்களால் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாட்டு ஆய்வாளர்களின் கூட்டுமுயற்சியில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உயிரணு சாப்ட்வேர் தொழில்நுட்பத்தின் முழுமையான வளர்ச்சிக்கு பின்னர் மனிதர்களுக்கான ஒரு பொற்காலம் பிறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக