செவ்வாய், 10 ஜூலை, 2012

என்னோடு பேச வாருங்கள்;அழைக்க ஒரு இணையதளம்

Posted On July 10,2012,BY Muthukumar
யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாக ‘எனி ஒன் அவுட் தேர்’ தோன்றுகிறது.
இது ஒரு இணைய அரட்டை தளமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் யூகம் சரி தான்.இது இணைய அரட்டைக்கு வழி செய்யும் தளம் தான்!
அது மட்டும் அல்ல,சாட்ரவுலெட்டிற்கு பிறகு உதயமான இரண்டாம் அலை அரட்டை தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம்.
சாட்ரவுலெட் இணைய அரட்டைக்கு மீண்டும் சுவாரஸ்யம் அளித்து மறுவாழ்வு தந்த தளம்.
முற்றிலும் அறிமுகம் இல்லாதவர்களோடு வெப்கேம் மூலம் உரையாடும் வசதியை ஏற்படுத்தி தந்ததோடு இப்படி உரையாடுபவர்களை தேர்வு செய்வதில் எந்த சுதந்திரமும் தராமல் ஒரு வித தற்செயல் தன்மையை அளித்ததே சாட்ரவுலெட்டின் தனிச்சிற‌ப்பு.இந்த எதிர்பாரா தன்மையே சாட்ரவுலெட்டை பரபரப்பாக பேச வைத்தது.
சாட்ரவுலெட்டின் வெற்றி அதே போன்ற மேலும் பல இணைய அரட்டை தளங்களுக்கு வித்திட்டது.எல்லாவற்றிலுமே அடிப்படையில் ஒரு வித தற்செயல் தன்மை இருப்பதாக கொள்ளலாம்.எல்லாமே ஏதாவது ஒரு வகையில் அறிமுகம் இல்லாதவர்களோடு உரையாட வழி செய்கின்ற‌ன.
ஆனால் எனி ஒன் அவுட் தேர் அரட்டை தளம் இவற்றில் இருந்து கொஞசம் மாறுபட்டு இருப்பது தான் சுவாரஸ்யம்.
யாராவது என்னோடு பேச தயாராக இருக்கிறீர்களா என கேட்டு அதற்கு சம்மதிக்கும் நபர்களோடு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.ஆனால் யாரோ ஒருவரை பேச வைப்பதற்கு பதில் இந்த கேள்வியை கேட்பவர்களின் விருப்பத்திற்கேற்ற நபர்களை அறிமுகம் செய்து வைக்கிறது.
அதாவது உரையாட விரும்புகிறவர்கள் எந்த விஷயம் பற்றி பேச விரும்புகின்றனரோ அது பற்றி பேச தயாராக இருப்பவர்களை தேடித்தருகிறது.
அரட்டைக்கு ஏங்குபவர்கள் முதலில் தாங்கள் பேச விரும்பும் விஷயம் பற்றி குறிப்பிட வேண்டும்.இதற்காக என்றே டிவிட்டரில் குறும்பதிவுட இருப்பது போல ஒரு கட்டம் போல ஒரு கட்டம் இருக்கிறது.(ஆனால் அதிகபட்சம் 110 எழுத்துக்கள் தான்).அந்த கட்டத்தில் மனதில் உள்ள விருப்பத்தை குறிப்பிட வேண்டும்.
உடனே இந்த இணையதளம் அதில் உள்ள வார்த்தைகளை பிரித்து போட்டு அதன் பின்னே உள்ள விருப்பத்தை புரிந்து கொண்டு அதே எண்ணம் கொண்ட இணையவாசிகளை பரிந்துரைக்கிறது.
அந்த பரிந்துரையை ஏற்று உரையாடலை துவக்கலாம்.அல்லது இன்னும் பொருத்தமானவர் தேவை என்றால் கீவேர்டுகளை மாற்றி போட்டு தேடலாம்.இணையவாசிகளின் தேசங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் இணையவாசிகளின் அறிமுக பக்கத்தை பார்த்து அவர்களை பற்றிய தகவல்களின் அடிப்படையில் யாருடன் பேசுவது என தீர்மானிக்கலாம்.
தேடல் மிக்கவர்கள் என்றால் கேள்வி பதில் தளங்களில் செய்வது போல தாங்கள் பதில் தேட நினைக்கும் கேள்வியையும் கேட்கலாம்.சக உறுப்பினர்களில் அதற்கு பதில் தெரிந்தவர்கள் அதற்கு பதில் அளிக்க முன்வந்தால் அதனடிப்படையிலும் உரையாடலாம்.
உரையாடல் என்பதே ஒத்த கருத்தின் அடிப்படையில் உருவாவது என்னும் போது பேச நினைப்பவர்கள் அவர்கள் மனதில் உள்ள விஷயங்களுக்கேற்ற நபர்களோடு பேச வாய்ப்பு தரும் இந்த தளத்தை வரவேற்கலாம்.
எளிமையான‌ அடிப்படை கருத்தாக்கத்தை மீறி இந்த தளம் சிக்கலான கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது.உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளும் அதற்கான கருத்துக்களும் தொகுத்தளிக்கப்படுவதால் அவற்றை பார்த்து குறிப்பிட்ட உறுப்பினரின் தனமையை தெரிந்து கொண்டு அவரோடு உரையாட முற்படலாம்.
உரையாடல் அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு சாதகமாக வாக்களித்து கருத்து தெரிவிக்கலாம்,இல்லை ஆட்சேபம் தெரிவித்து எதிர் வாக்களிக்கலாம்.எதிர் வாக்குகளுக்கு பயந்து உறுப்பினர்கள் மோசமாக நடந்து கொள்ளாமல் இருக்க இது உதவும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல‌ உறுப்பினர்கள் கேட்டிருக்கும் கேள்விகளின் பட்டியல் தோன்றி கொண்டே இருக்கிறது.அதனை பார்த்து நீங்களும் கூட யாருடன் பேசலாம் என தீர்மானித்து கொள்ளலாம்.
இணையம் வழி உரையாடலுக்கும் அது தரும் சுவாரஸ்யத்திற்கும் (ஆபத்துக்களுக்கும்)தயாராக இருப்பவர்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.புதிய நட்பும் கிடைக்கலாம்.
இணையதள முகவரி;http://www.anybodyoutthere.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக