ஞாயிறு, 29 ஜூலை, 2012

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? – சி.டி.யில் எழுத முன்னெச்சரிக்கை டிப்ஸ்

Posted On July 29,2012,By Muthukumar
பிளாஷ் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன. மேலும் இவற்றை எந்த வகையான டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் சிறப்பு.
சிடிக்களைப் பொறுத்தவரை, அதில் டேட்டாக்களை எழுதுகையில்தான் அதிகக் கவனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. உங்களுடைய கம்ப்யூட்டரில் சிடி அல்லது டிவிடியில் பைல்களை எழுதுகையில் பிற புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால் அவற்றை நிறுத்துவது நல்லது. ஒரே நேரத்தில் பலவகை புரோகிராம்களை இயக்குவது தான் இன்றைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு என்றாலும் மல்ட்டி மீடியா அம்சங்கள் அதிகமாகக் கொண்ட இன்டர்நெட் தளங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் சிடி / டிவிடிக்களில் எழுதுவது பாதிக்கப்படலாம். எனவே இன்டர்நெட் தொடர்பினையே நிறுத்திவைப்பது நல்லது. அதே போல சிபியு பயன்பாட்டினைக் குறைத்திட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களையும் நிறுத்தி வைப்பது நல்லது. இல்லை என்றால் நிச்சயமாக பபர் அன்டர் ரன் என்ற பிரச்னை சிடி எழுதும் பணியில் எதிர்கொள்ள நேரிடும். கூடுதல் இயக்கங்கள் சிடியில் எழுதுவதைத் தடுக்காது என்றாலும், பல சிக்கல்கள் ஏற்படுவதை நிறுத்தும்.
2. நீங்கள் பயன்படுத்தும் பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பினைத் தந்துள்ள நிறுவனத்தின் இணைய தளம் சென்று அதில் புதியதாக ஏதேனும் டிரைவர்கள் போட்டிருந்தால் அவற்றை இறக்கிப் பதிந்து கொள்வது நல்லது.
3. சிடி / டிவிடிக்களில் பைல்களை எழுத வெவ்வேறு பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் தொகுப்பில் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. இது தவிர இலவசமாக பல கிடைக்கின்றன. அவை :
* Acoustica http://www.acoustica.com/
* Nero http://www.nero.com/
* NTI Software http://www.ntius.com/
* Roxio http://www.roxio.com/
இவை சிடிக்களிலும் கிடைக்கின்றன. இவற்றையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது. எது உங்களுக்கு எளிதாகவும் உகந்ததாகவும் தோன்றுகிறதோ, அவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம்.
4. ஒரு சிடி / டிவிடியில் எழுத அது தாங்கிக் கொள்ளும் அதிகபட்ச வேகம் என்னவென்று அந்த சிடியில் இருக்கும். அதைக் காட்டிலும் சிறிது குறைவான வேகத்தில் பைல்களை எழுதவும். இவ்வாறு எழுதும் வகையில் உங்களின் பர்னிங் சாப்ட்வேர் அமைக்கப்படும் வசதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
5.உங்களுடைய பர்னிங் சாப்ட்வேரில் அன்டர் ரன் பாதுகாப்பு உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். சிடி / டிவிடியில் தகவல் எழுதப்படுகையில் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது தான் இந்த அன்டர் ரன் பிரச்னை வரும். இதனைச் சமாளித்திடும் நிலையில் பர்னிங் சாப்ட்வேர் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிடி / டிவிடி கரப்ட் ஆகிவிடும்.
6. பல பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல்களை எழுதி முடித்த பின்னர் தகவல்கள் சரியாக எழுதப்பட்டுள்ளனவா என சோதித்து அறியும் டேட்டா வெரிபிகேஷன் என்னும் வழிமுறை தரப்பட்டிருக்கும். இதன் மூலம் எந்தவிதமான பிழைகளும் இல்லாமல் சிடி/டிவிடிக்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். இருப்பினும் இது 100% உறுதிதானா என்பதனை உறுதியாகக் கூற முடியாது. நாட்கள் செல்லச் செல்ல இவை பயனற்றுப் போக வாய்ப்புண்டு. எனவே பைல்களை பேக்கப் எடுப்பதாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி / டிவிடி காப்பிகள் எடுப்பது நல்லது. அல்லது வேறு ஹார்ட் டிஸ்க்குகளில் பதிந்து வைப்பதுவும் நல்லது.
7.மொத்தமாக சிடி/டிவிடிக்களை சொற்ப விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவது அந்த நேரத்திற்கு காசை மிச்சம் பண்ணும். ஆனால் காசைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள தகவல்கள் அடங்கிய பைல்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே நல்ல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சிடி/டிவிடிக்களையே பயன்படுத்தவும்.
8. சிடியில் எழுதி முடித்த பின் ஐ.எஸ்.ஓ. பைல் குறித்து ஒரு கேள்வி கேட்கப்படும். நாம் இது என்ன அறியாமலேயே தவிர்த்துவிடுவோம். ஒரு சிடி / டிவிடியில் உள்ள அனைத்து பைல்களின் அடங்கலை ஒரு தோற்றமாகத் தரும் பைல் ஐ.எஸ்.ஓ. பைல் ஆகும். பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகள் இந்த பைல்களை நேரடியாக எடுத்துக் கொண்டு அப்படியே சிடி / டிவிடிக்களில் எழுதும் திறன் கொண்டவை. ஒரு சிடி /டிவிடி யில் உள்ள தகவல்களை இன்டர்நெட் வழியே தருவதற்கு இந்த வகை பைல்கள் ஏற்றவை. எடுத்துக்காட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த வகையிலேயே இன்டர்நெட் வழி தந்தது. பைல்களைச் சுருக்குவதற்கு ZIP மற்றும் RAR போன்ற பைல்கள் இருந்தாலும் இவற்றை விரித்துப் பின்னர் தான் சிடி/டிவிடிக்களில் பதிய முடியும். ஆனால் ஐ.எஸ்.ஓ. பைல்களை பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளே விரித்துப் பதிந்து கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக