Posted On March 19,2012,By Muthukumar
தேடியந்திரம் என்றால் கூகுல் என்பதை போல வரைபடம் என்றால் கூகுலின் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் நினைவுக்கு வரலாம்.பலவிதங்களில் கூகுல் மேப்ஸ் சிறந்ததும் கூட!
ஆனால் பல நேரங்களில் பழைய வரைபடங்கள் தேவைப்படலாம்.வரலாற்று ரீதியான தகவல்கள் தேவைப்படும் போது அந்த கால வரைப்படங்களில் தேடிப்பார்ப்பதே ஏற்றதாக இருக்கும்.இது போன்ற நேரங்களில் ஓல்டு மேப்ஸ் ஆன்லைன் இணையதளம் கைகொடுக்கும்.
பழைய வரைபடங்களின் தொகுப்பாக இந்த தளம் இருக்கிறது.எந்த காலகட்டத்து வரைபட விவரம் தேவை என்றாலும் இதில் தேடிப்பார்க்கலாம்.
வரைபடங்களை தேடுவதற்கான வசதியும் விரிவாகவே இருக்கிறது.எந்த இடம் அல்லது நாட்டை சேர்ந்த வரைபடம் தேவை என குறிப்பிட்டு தேட முடிவதோடு வரைபடத்தின் காலத்தையும் குறிப்பிட்டு தேடலாம்.அதாவது எந்த நூற்றாண்டின் வரைபடம் தேவை என்பதையும் குறிப்பிடலாம்.
உலகம் முழுவதும் உள்ள பொது நூலகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் வரைபடங்களின் டிஜிட்டல் பிரதியாக வரைப்டங்கள் இருக்கின்றன.ஆகையால் வரைபடங்களை டவுண்லோடு செய்யும் தேவையில்லாமல் அப்படியே பார்க்கலாம்.
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலையின் வரலாற்று வரைபட திட்டம் சார்பில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.எல்லோரும் அணுகக்கூடிய உலக டிஜிட்டல் வரைபடங்களுக்கான நூலகமாக இந்த தளம் விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தளம் இயங்கி வருகிறது.எனவே வரலாற்று வரைபடம் உள்ளவர்கள் அவர்றை சமர்பிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வரைபடங்களுக்கான எளிய தேடல் வசதி கொண்ட இந்த தளத்தின் சிறப்பம்சம் வரைபடங்கள் அனைத்தும் பூவியியல் ரீதியான இருப்பிட அடையாள வசதி கொண்டிருப்பது தான்.இதன் விளைவாக தளத்தில் நுழைந்ததுமே இணையவாசிகளின் இருப்பிடம் உணரப்பட்டு அவர்களின் இருப்பிடம் சார்ந்த வரைபடங்களே முகப்பு பக்கத்தில் தோன்றுகின்றன.
சென்னைவாசிகள் அணுகும் போது முகப்பு பக்க்த்தில் தமிழக்கத்தை மையமாக கொண்ட இந்திய வரைபடம் தோன்றுகிறது.அருகிலேயே சென்னை சார்ந்த வரலாற்று வரைபடங்களின் விவரங்களும் இடம் பெறுகின்றன.
http://www.oldmapsonline.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக