வெள்ளி, 30 மார்ச், 2012

பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.

Posted On March 30,2012,By Muthukumar
இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது.எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவு.
இந்த வகையில் தொழில் முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும் நோக்கத்தோடு எய்ட்டிபை பை பிப்டிபை என்னும் தளம் உதயமாகியிருக்கிறது.
இந்த தளத்தை சாட் ரவுலெட்டும் லின்க்டு இன்னும் இணைந்த கலவை என்று வர்ணிக்கலாம்.அதன் பயனாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் அதே நேரத்தில் பயனுள்ள தொட்ர்புகளை இந்த தளம் தேடித்தருகிறது.
லின்க்டு இன் தொழில் முறையினருக்கான பேஸ்புக்.இதன் மூலம் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு தொழில் முறையிலான நட்பை வளர்த்து கொள்கின்றனர்.
சாட் ரவுலெட் குலுக்கல் முறையில் புதியவர்களோடு தொடர்பு கொண்டு இணைய அரட்டையில் ஈடுபட உதவும் தளம்.அடிப்படையில் இந்த சேவை மிகவும் சுவாரஸ்யமானது.எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் குத்து மதிப்பாக யாராவது ஒரு உறுப்பினரோடு வெப்கேம் வழியே இணைய அரட்டையில் ஈடுபடலாம்.ஒவ்வொரு முறையும் அரட்டை அறையில் தோன்றும் நபர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி முற்றிலும் அறிமுகம் இல்லாவதவரோடு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அரட்டை அடிக்க வாய்ப்பு உண்டாக்கி தருவதே இந்த தளத்தின் சுவாரஸ்யம்.
ஏறக்குறைய இதே தன்மையை தொழில் முறையிலான நண்பர்களை தேடிக்கொள்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது எய்ட்டிபை பை பிப்டிபை இணையதளம்.
எப்படி சாட் ரவுலெட் அறிமுகம் இல்லாத புதியவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறதோ அதே போல இந்த தளம் அறிமுகம் இல்லாத நபர்களை இணையம் மூலம் சந்தித்து பேச வைக்கிறது.ஆனால் இந்த அறிமுகம் இல்லாதவர்கள் ‘யாரோவாக’ இல்லாமல் தொழில் முறையிலானவர்களாக இருப்பார்கள்.அதாவது லின்க்டு இன் உறுப்பினர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்.(லின்க்டு இன் அல்லது வர்த்தக நிறுவன இமெயில் முகவரி மூலம் தான் இதில் உறுப்பினராக முடியும்)
அதாவது வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி தரும் உத்தியை இந்த தலம் கொஞ்சம் தலை கீழாக திருப்பி போட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
வழக்கமாக தொழில் முறையிலான தொடர்புகளை விரும்புகிறவர்கள் ஒத்த கருத்து அல்லது பொது தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே புதியவர்களை சந்திக்க விரும்புவார்கள்.ஆனால் இந்த தளமோ அதற்கு நேர் மாறாக தொழில் முறையிலானவர்களில் யாரோ ஒருவரோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறது.
இப்படி அறிமுகம் செய்யப்படும் நபரோடு வெப்கேம் வழியே அரட்டை அடிக்கலாம்.இந்த அரட்டையின் மூலம் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களாகலாம்.இந்த நட்பு தொழில் ரீதியாக பயனுள்ளதாகவும் அமையலாம்.ஆக நட்புக்கு நட்பும் கிடைக்கும் வர்த்தக தொடர்பும் சாத்தியமாகும்.
அறிமுகமாகும் நபர்களோடு அதிக பட்சம் இரண்டு நிமிடங்களே அரட்டை அடிக்க முடியும் என்பது தான் முகவும் சுவாரஸ்யமானது.அதோடு இந்த தளத்தின் நோக்கத்தோடும் பொருத்தமானது.பெரும்பாலும் பிசியாக இருப்பவர்களே இந்த சேவையை பயன்படுத்த போவதால் அவர்களால் அரட்டை அடிப்பதில் அதிக நேரத்தை செலவிட முடியாது .புதிய நண்பர்கள் கிடைத்தாலும் வெட்டிக்கத்தை பேச அவர்களுக்கு நேரம் இருக்காது.எனவே இரண்டு நிமிடம் என்ற கட்டுப்பாட்டை அவர்கள் விரும்பக்கூடும்.
இரண்டு நிமிடத்திற்குள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு விட வேண்டும்.அதன் பிறகு விருப்பம் இருந்தால் அந்த புதிய நண்பரை தொடர்பு கொள்வதற்கான வசதியும் இருக்கிறது.அதே போல யாரை எல்லாம் சந்தித்தோம் என்னும் விவரம் உறுப்பினர்களின் தகவல் பக்கத்தில் சேமித்து வைக்கப்படும்.எப்போது விரும்பினாலும் அரட்டை அடித்தவரை தேடி கண்டு பிடித்து விடலாம்.
இந்த தளத்தில் ஒவ்வொரு முறையும் ஒருவரை சந்திக்கலாம்,ஆனால் ஒரு முறை சந்தித்தவரை மறுமுறை சந்திக்க முடியாது.அது தான் இதன் தனித்தன்மை.
யாரை சந்திக்க போகிறோம் என்று தெரியாமல் இருப்பது இந்த சேவையின் சிறப்பு .ஆனால் யாரை சந்தித்தாலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் சிறப்பு!.
இணையதள முகவரி;http://85by55.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக