வியாழன், 29 மார்ச், 2012

உங்களை பற்றி சொல்ல இரு இணையதளம்.

Posted On March 29,2012,By Muthukumar
எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் அநேகம் இருக்கும்.
நான் யார் என்பதை பறைசாற்றக்கூயதாக அந்த தகவல்கள் இருக்கலாம்.சுயசரிதை குறிப்புகளாக இருக்கலாம்.மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் விவரங்களாக இருக்கலாம்.புதிய பழக்கமாக,திடமான நம்பிக்கையாக,வாட்டும் அச்சமாக… என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மிகவும் பொருத்தமாக பேக்ட் என்னும் தகவலுக்கான ஆங்கில பதத்தை குறிக்கும் வகையில் பேக்டோ என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் தனிநபர்கள் தங்களை பற்றிய தகவகல்களை வெளியிட வழி செய்கிறது.
தகவல்களுக்கான குறும்பதிவு சேவை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் உங்களை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது.
டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் இருப்பது போன்ற ஒரு கட்டத்தில் இந்த தகவல்களை அப்படியே டைப் செய்ய வேண்டியது தான்.அதற்கு முன்பாக இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
உறுப்பினரான பின் உங்கள் ராஜ்யம் தான்.
நீங்கள் யார் என்பதை உணர்த்தக்கூடிய தகவல்களை இந்த கட்டத்தில் டைப் செய்து மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம்.இப்படி ஒவ்வொரு தகவலாக உங்களை பற்றி அழகாக அறிமுகம் செய்யலாம்.
கருத்துக்களையும் மனஓட்டத்தையும் பகிர்ந்து கொள்ள பேஸ்புக் மற்றும் குறும்பதிவு சேவையான டிவிட்டரும் இருக்கின்றனவே ,அதன் பிறகு தனியே இந்த சேவை எதற்கு என்று கேட்கலாம்.உண்மை தான்,நினைத்ததை பகிர்ந்து கொள்ள பேஸ்புக்கே போதுமானது தான்.
ஆனால் பேக்டோ உங்களை பற்றிய தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கானது.
வேலை வாய்ப்புக்கான நேர்காணலின் போதோ அல்லது புதியவர்களை சந்திக்கும் போதோ உங்களை பற்றிய தகவல்களை தெரிவிப்பது உண்டல்லவா?ஏன் சில நேரங்களில் நெருக்கமானவர்கள் கூட உங்களை பற்றீய ஒரு விஷயத்தை அறிந்து கொண்டு ,இது நாள் வரை எனக்கு தெரியாதே என்று வியந்து போவது உண்டல்லவா?
அத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான இணைய பலகை தான் பேக்டோ.
உங்களுக்கு நன்றாக பாட வரும் என்பதில் துவங்கி ,சமைக்க தெரியும்,நாட்டு புற இசையில் ஆர்வம் அதிகம்,இரக்க குணம் உண்டு,நள்ளிரவில் நட்சத்திரங்களை பார்க்க பிடிக்கும் என ஒருவரை பற்றிய எந்த அம்சத்தை வேண்டுமானாலும் இங்கு வெளியிடலாம்.
டிவிட்டரில் உங்களை பற்றிய அறிமுக குறிப்பு எழுதுவது போல தான்.ஆனால் டிவிட்டர் அறிமுகம் ரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் மிகவும் முக்கியம் என கருதும் விஷயத்தை மட்டுமே டிவிட்டர் அறிமுகத்தில் தெரிவிக்க முடியும்.
பேக்டோவில் அந்த நெருக்கடி கிடையாது.தினம் தினம் ஒவ்வொரு தகவலாக கூட தெரிவிக்கலாம்.
ஒருவர் உருவாக்கி கொள்ளும் பேக்டோ பக்கத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இதில் இன்னொரு சுவாரஸ்யமான வசதியும் உண்டு.
நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை பார்த்து விட்டு உங்கள் நண்பர்கள் அது பற்றி கருத்து தெரிவிக்கலாம்.
ஆஹா அற்புதம் என்பதில் துவங்கி நானும் கூட அப்படி தான் என பலவகையான கருத்துக்களை நண்பர்கள் தெரிவிக்கலாம்.உங்களை பற்றி மற்றவர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கருத்து பரிமாற்றம் கை கொடுக்கும்.
மேலும் தற்பெருமை சார்ந்த கருத்துக்களாக பதிவு செய்யாமல் மனம் திறந்து சொல்லக்கூடிய கருத்துக்களை வெளியிடவும் இது உதவும்.
அதே போல உங்கள் நண்பர்கள் பற்றிய புதிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் இந்த தளம் உதவலாம்.
உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் புதிய தகவல்களை இடம்பெற வைக்கலாம்.
நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை குறிப்புகள் போல சாம்னயர்களின் வாழ்கை குறிப்புகளாக அவர்களின் ஆளூமை சித்திரமாக கூட இவை விலங்களாம்.நண்பர்கள் குறித்த புதிய தரிசனத்தையும் புதிய நண்பர்களையும் கூட இந்த சேவை ஏற்படுத்தி தரலாம்.ஏன் சுயபரிசோதனைக்கான இடமாக கூட விளங்கலாம்.
இணையதள முகவரி.;www.facto.me

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக