வியாழன், 29 மார்ச், 2012

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

Posted On March 29,2012,By Muthukumar மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான சேவையை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றும் பாராட்டலாம்.
மற்ற உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவை போல்வே கிரப் வித் அஸ் தளமும் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட உதவுகிறது.ஆனால் மதிய உணவுக்கான திட்டமிடலை மேற்கொண்டு நண்பர்களை அழைக்க உதவுவதோடு நின்று விடாமல் இவை எல்லாவற்றையும் மேலும் எளிமையாக்கி தருகிறது.
அதோடு முக்கியமாக இந்த சேவையை பயன்படுத்தும் போது சாப்பிடுவதற்கான ரெஸ்டாரண்டை தேர்வு செய்யவோ சாப்பாட்டிற்கான பில தொகையை செலுத்தவோ அல்லாட வேண்டியதில்லை.
நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் நுழைந்து யாருடன் சாபிடலாம் அல்லது எங்கே சாப்பிடலாம் என்று தீர்மானித்து கொள்ள வேண்டும்.இதற்காக இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவு அட்டவனையில் பொருத்தமான தினத்தை தேடிப்பார்க்கலாம்.
எந்த ரெஸ்டாரண்டில் என்று உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,யாரெல்லாம் பங்கேற்கினறனர் என்பதை பார்த்து அந்த ஏற்பாட்டில் உடன்பாடு இருந்தால் நாமும் இணைந்து கொள்ளலாம்.உணவருந்த வருவதாக தெரிவிக்கும் போதே உணவுக்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விட வேண்டும்.எனவே விருந்தன்று பில் தொகை பற்றி கவலைப்படாமல் நேராக ரெஸ்டாரண்டுக்கு சென்று நண்பர்களோடு உரையாடியபடி உணவை சுவைக்கலாம்.
நண்பர்கள் என்பது நண்பர்களாக கூடியாவர்களையும் தான் குறிக்கும்.அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் வருவதாக பதிவு செய்து கொண்டு அங்கே சென்று அறிமுகம் செய்து கொண்டு நட்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
ஆக,நட்புக்கு நட்பும் கிடைக்கும் சுவையாக சாப்பிட்டது போலவும் இருக்கும்.ஆனால் புதியவர்களோடு உணவு சாப்பிட சங்கடப்படுபவர்கள் தாஙக்ள் விரும்பும் தினத்தில் தங்களுக்கு விருப்பமான ரெஸ்டாரண்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டு அதில் பங்கேற்குமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் வருங்கால விருந்துகள் பட்டியலிடபட்டிருப்பதோடு கடந்த கால விருந்துகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.இந்த பட்டியலை புரட்டி பார்ப்பதன் மூலம் முன்னர் நடைபெற்ற விருந்துகளில் யாரெல்லாம கலந்து கொண்டனர் என்பதை பார்த்து கொள்ளலாம்.இதன் மூலமும் புதிய நட்பு கிடைக்க வாய்ப்புள்ளது.புதிய ரெஸ்டாரண்ட்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
அதே போல வருங்கால விருந்து பட்டியலில் இடங்கள் காலியாகி இருக்கின்றனவா அல்லது அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டனவா என்ற தகவலும் கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் முக்கிய அமெரிக்க நகரங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் நகரத்தின் பெயரை குறிப்பிட்டு அங்கு திட்டமிடப்படும் விருந்து நிகழ்ச்சிகள் பற்றிய முன்னறிவிப்பை இமெயில் மூலம் பெற்று கொள்ளலாம்.
இந்த தளத்தில் உணவு சார் சமூக வலைப்பின்னல் சேவை தொடர்பான வலைப்பதிவும் இருக்கிறது.அதே போல நண்பர்களோடு ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றியும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
உணவு பிரியர்களுக்கு நிச்சயம் இந்த தளம் உற்சாகத்தை தரும்.
இணையதள முகவரி;https://www.grubwithus.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக