Posted On March 2,2012,By Muthukumar
எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த தேவையை போக்கும் வகையில் ஐநேச்சுரலிஸ்ட் டாட் ஆர்ஜி தளம் அமைந்துள்ளது.
இயற்கையில் காணும் காட்சிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் மலர்களையும் பதிவு செய்து பகிர்ந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தின் வாயிலாக இயற்கை ஆர்வலர்களை சந்திக்கலாம்,அவர்கள் மூலமாக உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இயற்கை ஆர்வலர்கள் இந்த தளத்தை பார்த்தால் மெய்மறந்து போய் விடுவார்கள்.காரணம் இயற்கை மீதான ஆர்வத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான இடமாக இந்த தளம் இருப்பது தான்.இவ்வாறு இயற்கையை ரசித்தவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கும் போது இயற்கையை ரசிக்கத்தெரிந்தவர்களின் மனது இறக்கை கட்டி பறக்கவே செய்யும்.
இயற்கையில் தான் எத்தனை வகையான எழில்கள்! எத்தனை விலங்கினங்கள்! எத்தனை பறவையினங்கள்!எத்தனை தாவரங்கள்!அவற்றையெல்லாம் இந்த தளத்தில் காணலாம். கூடவே அவை தொடர்பான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.எல்லாமே சக இயற்கை ஆர்வலர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை.
இங்கு இயற்கையில் உலா வரலாம்;இயற்கையை அறிந்து கொள்ளலாம்;இயற்கையை பகிர்ந்து கொள்ளலாம்!.
பொதுவாகவே இயற்கை ஆர்வலர்கள் குறிப்பேடும் காமிராவுமாக திரிபவர்கள்.எந்த இடத்தில் புதிதாக ஒரு தாவிரததையோ விலங்களையே பார்த்தால் உடனே அதனை குறிப்பெடுத்து கொள்வார்கள்.காமிராவில் கிளிக் செய்தும் கொள்வார்கள்.இதற்காக என்றே நேரம் கிடைக்கும் போது இயற்கையை பார்த்து ரசிக்க புதிய இடங்களுக்கு செல்வதும் உண்டு.
இத்தகைய இயற்கை ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.இவ்வளவு ஏன் நாம் எல்லோருக்குள்ளேயும் ஒரு இயற்கை ரசிகன் இல்லாமல் இல்லை.அந்த ரசிகன் எட்டிப்பார்க்க எத்தனை பேர் அனுமதிக்கிறோம் என்பதே கேள்வி.
இயற்கையை ரசித்து மகிழ்பவர்கள் சேகரிக்கும் குறிப்புகளை எல்லாம் அவற்றுக்குறிய புகைப்படங்களோடு ஒரே இடத்தில் பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்?அந்த இடமாக தான் இந்த தளம் திகழ்கிறது.
பறவைகளையோ மலர்களையோ அல்லது விலங்குகளையோ எந்த இடத்தில் எப்போது பார்த்தோம் என்பது இயற்கை ஆர்வலர்கள் பதிவு செய்யலாம்.இதற்காக என்று ஒவ்வொருவரும் தங்களுக்காக இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
ஒவ்வொரு உறுப்பினரின் பக்கத்திலும் அவர் பார்த்து ரசித்த காட்சிகளின் எண்ணிக்கை,அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களின் பட்டியல் போன்ற விவரங்களோடு அவரைப்பற்றிய அறிமுகமும் இடம் பெறுகின்றன.டைரி குறிப்பு போல விரிவான விளக்க குறிப்புகளையும் எழுதலாம்.
இப்படி உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை பலவிதங்களில் அணுகலாம்.முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே சமீபத்திய பகிர்வுகளின் பட்டியல் வரவேற்கிறது.அதன் மூலம் எந்த இடத்தில் யார் எதனை பார்த்து ரசித்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
இதை தவிர பார்வைகள்,இடங்கள்,உயிரின வகைகள் என தனித்தனி பிரிவுகளின் கீழும் தகவல்களை அணுகலாம்.
பார்வைகள் பகுதியில் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட குறிப்புகளின் பட்டியலை காணலாம்.உயிரின வகைகள் பகுதியில் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட குறிப்புகளின் விவரங்களை ஒவ்வொரு உயிரின வகைகளுக்கேற்ப பார்க்கலாம்.
எந்த உயிரினத்தின் மீது ஆர்வமுள்ளதோ அதற்கான புகைப்படத்தை கிளிக் செய்தால் அந்த உயிரினம் பற்றிய விரிவான விவரங்களுக்கான பக்கத்தை காணலாம்.அதில் விக்கிபீடியாவின் அறிமுகம் உட்பட சகலவிதமான விவரங்களையும் காணலாம்.
மேலும் அந்த குறிப்பிட்ட உயிரினம் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
அதே போல இடங்கள் பகுதியில் உலக வரைபடத்தில் உள்ள இடங்களில் கிளிக் செய்து அந்த இடத்தில் பார்க்கப்பட்ட பகிரப்பட்ட உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சக உறுப்பினர்களை பின்தொடர்ந்து நட்பை வளர்த்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு பற்வை ஆரவலர்கள் தங்களை போன்ற பறவை ஆர்வலர்களை பின் தொடரலாம்.
இயற்கை களங்கியமாக உருப்பெற்று வரும் இந்த தளம் உயிர்களை நேசிக்க வைக்கிறது உயிரியலை அறிய வைக்கிறது.
இணையதள முகவரி;http://www.inaturalist.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக