புதன், 4 ஏப்ரல், 2012

கைகளுக்குள் பிரபஞ்சம்

Posted On April 04,2012,By Muthukumar
பிரபஞ்சத்தின் எல்லைகளை இன்னும் யாரும் முழுமையாக நமக்குக் காட்டவில்லை. ஆனால் இதில் அடங்கியுள்ளவை குறித்து நாம் பல தகவல்களைக் கொண்டுள்ளோம். பல தகவல்கள் நாம் அறிந்து ஒத்துக் கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. சில இன்னும் அனுமானத்திலேயே உள்ளன. நாள் தோறும் ஏதேனும் ஒரு புதிய தகவலை, இந்தப் பிரபஞ்சம் குறித்து நமக்கு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தந்துகொண்டுள்ளனர். இவை அனைத்தையும் ஓரிடத்தில் நாம் தெரிந்து கொள்ள முடியுமா? சற்று சிரமம்தான். இருந்தாலும், இணைய தளம் ஒன்று இந்தப் பணியில் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளது. http://static.flabber.net/files/scal eoftheuniverse2.swf என்ற முகவரியில் உள்ள தளம் சென்றால், இந்த அதிசயமான பிரபஞ்ச கலைக் களஞ்சியத்தைக் காணலாம். The scale of the Universe என்று இந்த தளத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த தளம் சென்றவுடன் பிரபஞ்சத்தின் ஒரு காட்சி தெரிகிறது. பின்னர், நம் மவுஸின் சக்கரத்தைச் சுழற்ற,நாம் பிரபஞ்சத்தின் உள்ளும் வெளியுமாகச் செல்ல முடிகிறது. இதில் உயிரினங்கள், பொருட்கள், அண்ட சராசரங்களில் உள்ள கோளங்கள் என எத்தனையோ காட்டப்படுகின்றன. ஏதாவது ஒன்று குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா! உடனே கர்சரை அந்தப் பொருள் அருகே கொண்டு சென்று நிறுத்துங்கள். உடனே சிறிய கட்டத்தில் அந்தப் பொருள் குறித்த விளக்கம் கிடைக்கும். அண்டம் தொடங்கியதில் ஆரம்பித்தால், மனித இனம் தோன்றிய நாள், இன்றைய நிலை என வேகமாக உள்ளே செல்லலாம். சில வேளைகளில் பயமாகவும் உள்ளது. பிரமிப்பாக இருப்பதால் தான், மிகப் பெருமையாக நம்மைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதெல்லாம் வீண் என்ற சிந்தனை நமக்குத் தோன்றுகிறது. பிரபஞ்ச வெளியில் நாம் ஓர் அற்பப் பதர் என்ற எண்ணம் உருவாகிறது. இருப்பினும் நாம் ஓர் அதிசய உருவாக்கம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
இந்த தளம் பற்றிய ஒரு வீடியோ யு-ட்யூப் தளத்திலும் உள்ளது. அந்த வீடியோ உள்ள தள முகவரி http://www.youtube.com/ watch?v=uaGEjrADGPA.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக