செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பயர்பாக்ஸ் நம் வசமாக

Posted On April 17,2012,By Muthukumar
அனைத்து பிரவுசர்களிலும் குரோம் மிக வேகமாகச் செயல்படுகிறது என்றாலும், பழக்கத்தின் காரணமாக, பலர் பயர்பாக்ஸ் பிரவுசரையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இந்த பிரவுசருக்கென தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் ஆட் ஆன் தொகுப்புகள், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதில் நமக்குப் பல வசதிகளை அளிக்கின்றன. இவற்றை நாம் விரும்பும்படி அமைப்பதும் மிக எளிதாக உள்ளது.
இவை மட்டுமின்றி, அடிப்படையிலேயே, பயர்பாக்ஸ் பிரவுசரை நாம் நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். இந்த வசதிகளைத் தரும் about:config பக்கம் பலர் செல்வதே இல்லை. இது ஏதோ மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பக்கம் என்றே நாம் ஒதுங்கி விடுகிறோம். இது மறைந்திருப்பதற்குக் காரணம், இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், பயர்பாக்ஸ் இயக்கத்தினைப் பெரிய அளவில் மாற்றும் என்பதால் தான்.
ஆனால் இந்தப் பக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும், மீண்டும் அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் மிக எளிது. இந்தப் பக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நாம் குறிப்பிட்ட மதிப்பினை ஒதுக்கினால், அதற்கேற்ப பயர்பாக்ஸ் பிரவுசர் செயல்படும். இந்த மதிப்பு எண்ணாகவோ, பெயராகவோ, சொல்லாகவோ இருக்கலாம். இவ்வாறு நம் வசதிகளுக்காக நாம் இதில் ஏற்படுத்தக் கூடிய சில மாற்றங்களை இங்கு காணலாம்.
முதலில் இந்த மாற்றங்களைக் கொண்டுள்ள மாறா நிலையில் உள்ள பைலுக்கு ஒரு பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான், ஏதேனும் தேவைப்படாத மாறுதல் ஏற்பட்டு, பயர்பாக்ஸ் வழக்கமாக, நாம் எதிர்பார்ப்பிற்கு மாறாக இயங்கினால், பேக் அப் பைலைக் கொண்டு வருவதன் மூலம், பழைய நிலைக்குக் கொண்டு செல்லலாம். இந்த பைலின் பெயர் prefs.js. இந்த பைல் மூலம் பழைய நிலைக்குச் செல்ல முடியவில்லை என்றால், பிரவுசரை மீண்டும் இன்ஸ்டால் செய்து வழக்கம் போல செயல்படலாம்.
முதலில் about:config பக்கத்திற்கு எப்படிச் செல்வது? பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிக் கட்டத்தில் prefs.js என டைப் செய்திடவும். உடனே எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், வாரண்டி கிடையாது; இதன் இயக்கம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போய்விடும். உங்கள் செயல்பாடு குறித்து நீங்கள் உறுதியாக இருந்தால், தொடரவும் -- என்று இந்த எச்சரிக்கை சொல்லும். அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டு, கிளிக் செய்து செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் filter என்று ஒரு கட்டம் கிடைக்கும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான கட்டளை வரியைப் பெறலாம். இனி about:config பக்கத்தில் நாம் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களைக் காணலாம்.
1. பிரவுசரை வேகப்படுத்த: பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டது போல செயல்படவும்.
network.http.pipelining: இங்கே true என மாற்றவும்.
network.http.proxy.pipelining: இங்கே true என மாற்றவும்.
network.http.pipelining.maxrequests: இங்கே 8 என மாற்றவும். அடுத்து maxconnections என்பதனைத் தேடிப் பெறவும். இதில் network.http.maxconnections என்பதைப் பெறுவீர்கள். இதனை 96 என மாற்றவும். அடுத்து கிடைக்கும் network.http.maxconnectionsperserver என்பதில் மதிப்பை 32 என மாற்றவும்.
2. ஆண்ட்டி வைரஸ் ஸ்கேன் செய்வதை நிறுத்த: நீங்கள் பெரிய அளவிலான பைலை டவுண் லோட் செய்கையில், அதனை ஸ்கேன் செய்வது, பயர்பாக்ஸ் இயக்கத்தினை தாமதப்படுத்தும். எப்படி இருந்தாலும், டவுண்லோட் செய்த பின்னர் தனியாக அதனை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள். எனவே டவுண்லோட் செய்கையில் ஸ்கேனிங் செயல்பாட்டினை நிறுத்தலாமே. இதற்கு “scan Whendone” என்பதனைத் தேடிப் பெறவும். இந்த கட்டளை வரி browser.download.manager.scanWhenDone என இருக்கும். இதன் மதிப்பை “false” என மாற்றவும்.
3. பாப் அப்களை டேப்களாக மாற்ற: பாப் அப் விண்டோக்கள் டேப்களாக இயங்க முடியாத நிலையில் இருந்தால், பயர்பாக்ஸ் அவற்றை பாப் அப் பெட்டிகளாகவே நடத்தும். இவற்றைத் தனி டேப்களில் திறக்கும் படி செட் செய்துவிடலாம். இதற்கு newwindow எனத் தேடவும். மூன்று முடிவுகள் வரிகளாகக் கிடைக்கும். இதில் browser.link. open_newwindow.restriction என்ற வரியின் மதிப்பை 0 என மாற்றவும்.
4. ஸ்பெல் செக்: மாறா நிலையில், பயர்பாக்ஸ் பல வரிகள் கொண்ட பாக்ஸ் களில் அமைக்கப்படும் டெக்ஸ்ட்டை மற்றுமே ஸ்பெல்லிங் செக் சோதனைக்கு உட்படுத்தும். இதனை மாற்றி அனைத்து வகை டெக்ஸ்ட் பாக்ஸ்களிலும் ஸ்பெல் செக் மேற்கொள்ள, spellcheckdefault எனக் கொடுத்து தேடவும். layout.spellcheckDefault என்ற கட்டளை வரியின் மதிப்பை 2 என அமைக்கவும்.
5. சர்ச் கட்ட முடிவுகளை புதிய டேப்பில் பெற: நாம் சர்ச் கட்டத்தினைப் பயன்படுத்தி தேடுகையில், முடிவுகள் அதே டேப்பில் கிடைக்கும். இது நாம் விரும்பாத ஒன்று; ஏனென்றால், இந்தப் பக்கத்திலிருந்து உடனடியாக நீங்கள் தேடிய பக்கத்திற்குச் சென்றுவிடுவீர்கள். இதற்குப் பதிலாக புதிய டேப்பில் திறக்கப்பட்டால், அனைத்தும் நாம் பயன்படுத்த அப்படியே கிடைக்கும். இதற்கான செட்டிங்ஸ் அமைக்க, openintab எனக் கொடுத்துத் தேடவும். browser.search.openintab என்ற கட்டளை வரிக்கான மதிப்பை true என அமைக்கவும்.
6. தானாக புக்மார்க்குகளைக் கொண்டு வர: பயர்பாக்ஸ் தானாகவே புக்மார்க்குகளை சேவ் செய்து, இன்னொரு புரோகிராமிற்கு மாற்றுகிறது. இந்த மாறா நிலை ஏற்பாட்டில், இவை வசதியான bookmarks.html என மாற்றப்படாமல், places.sqlite என மாற்றப்படுகிறது. எளிதாக இன்னொரு இடத்திற்கு மாற்ற, autoExportHTML என்று டெக்ஸ்ட் கொடுத்துத் தேடவும். browser. bookmarks.autoExportHTML என்ற கட்டளை வரியின் மதிப்பை true என மாற்றவும்.
7. எக்ஸ்டன்ஷன் இன்ஸ்டலேஷன் தாமதம்: பயர்பாக்ஸ் பிரவுசர் அதன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றவை. ஆனால் ஒவ்வொரு முறை ஒரு எக்ஸ்டன் ஷனை இன்ஸ்டால் செய்கையில், இதன் தாமதத்தினைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இதனை மாற்றி அமைக்கலாம். enable_delay என டைப் செய்து தேடவும். security.dialog_enable_delay என்ற கட்டளை வரி கிடைக்கும். இதன் மதிப்பை 0 என மாற்றவும்.
8. சோர்ஸ் கோட் எடிட்டரில் திறக்க: ஓர் இணைய தளத்தின் சோர்ஸ் கோடினைப் பார்க்க விரும்பி, அதனைத் திறக்க முயற்சிக் கையில், அது பிரவுசரின் பாப் அப் விண்டோவில் காட்டப்படுகிறது. பொதுவாக இதனை ஒரு எடிட்டரில் மட்டுமே மாற்ற முடியும். எனவே இந்த பாப் அப் விண்டோவில் வருவதனைக் காப்பி செய்து, பின் எடிட்டரில் பேஸ்ட் செய்து, மாற்ற முயற்சிப்போம். இதற்குப் பதிலாக, இது நேரடியாக எடிட்டர் புரோகிராம் ஒன்றில் திறக்கப்பட்டால், நம் வேலை எளிதாகும் இல்லையா? இதற்கு view_source.editor என டைப் செய்து தேடினால், view_source.editor. external என்ற கட்டளை வரி கிடைக்கும். இதன் மதிப்பை true என மாற்றவும். அடுத்து கிடைக்கும் view_source.editor.path என்ற வரியில் நீங்கள் விரும்பும் எடிட்டரை அமைக்கவும்.
9. அதிக ஆட் ஆன் தொகுப்புகள்: ஆட் ஆன் தொகுப்புகளை பிரவுசரில் தேடுகையில், ஐந்து தொகுப்புகள் அதிக பட்சமாகக் காட்டப்படும். இது இன்னும் கூடுதலாக இருக்க நாம் விரும்புவோம். இதனை செட் செய்திடலாம். getAddons என டைப் செய்து தேடவும். extension.getAddons.maxResults எனக் கிடைக்கும் கட்டளை வரியில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதை அமைக்கலாம். இதனை 10 அல்லது அதற்கும் அதிகமாக அமைக்கலாம்.
10. பேக் ஸ்பேஸ் பட்டன் இயக்க: பயர்பாக்ஸ் பிரவுசரில் பேக் ஸ்பேஸ் பட்டனை அழுத்தி, நாம் பார்த்த இணையப் பக்கங்களில் ஒன்று முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ செல்லும்படி அமைக்கலாம். backspace என டைப் செய்தால் browser.backspace_action என்ற வரி கிடைக்கும். முன் சென்ற பக்கம் வேண்டும் என்றால் இதன் மதிப்பை 0 ஆகவும், பின் சென்ற பக்கம் வேண்டும் என்றால் இதன் மதிப்பை 1 ஆகவும் அமைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக