புதித்தாக அறிமுகமாகியிருக்கும் ஹிலியாட் தேடியந்திரத்தை இத்தகைய அதிசய தேடியந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயமாக இது ஒரு மாறுபட்ட தேடியந்திரம் தான்.
ஒரு விதத்தில் கூகுலுக்கு மாற்றாகவும் இதனை கூறலாம்.இப்படி சொல்ல முடிவதே மிகப்பெரிய பாராட்டு தான்.
ஹிலியாட் அப்படி என்ன செய்கிறது என்றால் தேடல் முடிவுகளை போரடிக்க கூடிய வகையில் பட்டியல் போட்டுத்தராமல் அதனை தானே வகைப்படுத்தி தருகிறது.எந்த குறிச்சொல் கொண்டு தேடப்பட்டாலும் தேடல் முடிவுகளை அழகாக வகைப்படுத்தி தந்து தேடல் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டித்தருகிறது.
தற்போதுள்ள தேடியந்திரங்கள் முடிவுகளை பட்டியலிடுவதோடு நின்று விடுகின்றன.அவற்றை வகைப்படுத்தி கொள்வது இணையவாசியின் பொறுப்பு.தேடியந்திரங்கள் அதிகபட்சமாக செய்வதெல்லாம் செய்தி,புகைப்படம்,வலைதளங்கள் என வகைப்படுத்தி கொள்ள வழி செய்வது மட்டுமே.
ஆனால் ஹிலியாட் தேடல் முடிவுகளை அவற்றின் தனமைக்கேற்ப வகைப்படுத்தி காட்டுகிறது.ஒவ்வொரு வகையும் ஒரு வண்ண வட்டத்தால் அடையாளம் காட்டப்படுகின்றன.தேவையான வண்ண வட்டத்தில் கிளிக் செய்தால் அந்த வகையிலான முடிவுகளை மட்டும் காணலாம்.இபடி ஒவ்வொரு வகையாக முடிவுகளை பரிசிலிக்கலாம்.
முதல் பார்வைக்கு இது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தலாம்.அதிலும் தேடச்சொன்னவுடம் முடிவுகளை கொண்டு வந்து கொட்டாமல் ,’கொஞ்சம் பொருங்கள் முடிவுகளை வகைப்படுத்தி கொண்டிருக்கிறோம்’ என சொல்லி காக்க வைத்துவிட்டு பின்னரே முடிவுகளை முன்வைக்கிறது.
கூகுல் மின்னலென தேடல் முடிவுகளை பட்டியலிட பழக்கப்பட்டவர்களுக்கு இது சங்கடத்தை தரலாம்.ஆனால் வகைப்படுத்தலை கண்ட பின் இந்த சங்கடம் மறைந்து விடும்.முடிவுகள் வகைப்படுத்தப்பட விதத்தை கவனித்து பார்த்தால் நமக்கென யாரோ பொறுப்புடன் அவற்றை ரகம் வாரியாக பிரித்து வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடியும்.அப்போது உண்மையிலேயே வியப்பு ஏற்படும்.
கூகுல் தேடல் முடிவுகளை பட்டியலிட பின்பற்றும் முறையவிட இது மாறுபட்டதாக இருப்பதும் புரியும்.முடிவுகளின் ரகங்களை பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் நிகழலாம்.ஒன்று நம்க்கேற்ற வகையை தேர்வு செய்து அந்த வகை முடிவில் மட்டுமே கவனம் செலுத்தலாம்.பிர வகைகளை காணும் போது நாம் தேட முற்பட்டதை தவிரவும் விஷயங்கள் இருப்பதை தெரிந்து கொள்வது இரண்டாவதாக நிகழும்.
உதாரணமாக சச்சின் என தேடினால் தேடல் முடிவுகள்,சச்சின்,2011,இந்தியா,கிரிக்கெட்,செய்திகள்,அறிமுகம் என்றெல்லாம் வகைபடுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.கிரிக்கெட் வீரர் சச்சினை பற்றிய தகவல் தேவை என்றால் கிரிக்கெட் அல்லது சச்சின் மீது கிளிக் செய்ய வேண்டும்.2011 ல் கிளிக் செய்தால் இந்த ஆண்டின் சச்சின் தொடர்பான் செய்திகள் வருகின்றன.எந்த வகையான செய்தி தேவையோ அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
அப்படியே சச்சின் கோனா என்ற பெயரில் ஒரு புகைப்பட் நிபுணர் இருப்பதையும்,சச்சின் அகர்வால் என்ற பெயரில் சாப்ட்வேர் நிபுணர் இருப்பதையும் காண முடிகிறது.
கூகுலிலேயே கூட இத்தகைய முடிவுகளை காணலாம்.அதோடு துணை குறிச்சொற்களை இணைத்து கொண்டு தேடலாம்.ஆனால் ஹிலியாட் நம்மிடம் இந்த பணியை விடாமல் சுயமாக செய்கிறது என்பதோடு வகைப்படுத்தல் முற்றிலும் இயற்கையாக அமைந்திருக்கிறது.
பல்வேறு குறிச்சொற்களை தேடிப்பார்க்கும் போது இதனை தெளிவாக உணரலாம்.வகைப்படுத்தல் ஒரே மாதிரியாக இல்லாமால் குறிச்சொற்களின் தன்மைக்கேற்ப அமைக்கின்றன.
குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கான முடிவுகளை தேடினால் ,டிவிட்டர்,அப்டேட்கள்,பாலோ,சோஷியல் என முடிவுகளை வகைப்படுத்தபடுவதை பார்க்கலாம்.எல்லாமே டிவிட்டரின் உள்ளடக்கம் சார்ந்தவை.
அதே போல தமிழ் என்று தேடினால் மக்கள்,பேச்சு,தமிழர்கள் என தமிழ் மொழி சார்ந்த வகைகளை பார்க்க முடிகிறது.கூடவே திரைப்படம் ,பாடல்கள் போன்ற வகைகளும் இடம் பெறுகின்றன.
ரஜினி என தேடும் போது சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த என்னும் வகை முதலில் வருகிறது.தொடர்ந்து செய்திகள்,நடிகர்,ரசிகர்கள்,பாடல்கள்,சூப்பர்ஸ்டார் போன்ற ரகங்கள் தோன்றுகின்றன.ஆக வகைப்படுத்தல் புத்திசாலித்தனமாகவே நிகழ்கின்றன.
தேடல் அனுபவத்தை மெருகேற்றித்தரும் புத்திசாலித்தனம்.
வகைகள் விலக்கி முழு பட்டியலையும் பார்க்கும் வசதியும் உண்டு.நீங்கலும் தேடிப்பாருங்கள்.வித்தியாசம் புரியும்.
தேடியந்திர முகவரி;http://www.helioid.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக