சனி, 30 ஜூன், 2012

வளையும் தன்மையுள்ள அதிநவீன 3டி மெமரி சிப்!

Posted On June 30,2012,By Muthukumar
மின்னணு எந்திரங்கள் என்றாலே டிவி, கம்ப்யூட்டர் போல பெரிய பெரிய பெட்டிகளாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது கையடக்க தொலைபேசியான செல்போன். இந்த செல்போன்கள் தந்த ஆச்சரியத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே மேலும் மாயாஜாலங்களை தொடர்ந்து செய்து வருகின்றன செல்போன் நிறுவனங்கள்.
செல்போனில் தொலைபேச மட்டும்தான் முடியும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் செல்போன் வடிவமைப்பாளர்களோ, `இல்லை இல்லை, செல்போனில் பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும், கேம்ஸ் ஆடவும் கூட முடியும்' என்று அசத்தினார்கள். இப்படி பல்வேறு கேளிக்கைகளுக்கு செல்போன் பயன்பட ஒரு முக்கியமான காரணம் மெமரி சிப் அல்லது கார்டுகள். பல மடங்கு டேட்டா அல்லது மின்னணு தகவல்களை ஒரு சிறிய சிப்பில் சேமித்து வைக்கும் திறனுள்ள அசத்தலான கருவிதான் இந்த மெமரி கார்டு.
செவ்வக வடிவமுள்ள, சிறு சிறு அட்டைகள் போல இருக்கும் தற்போதைய மெமரி கார்டுகள் ஒன்று முதல் 64 கிகா பைட்டு (Giga Byte) அளவு வரையிலான தகவல்களை சேகரித்து வைக்க பயன்படுகின்றன. மினி எஸ்.டி. மற்றும் மைக்ரோ எஸ்.டி. என இரு அளவுகளில் கிடைக்கும் இவை கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருக்கும் ஒரு அதி நவீன 3டி மெமரி சிப்பை உருவாக்கி அசத்தி இருக்கிறார் அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர்.
மைக்ரோ எஸ்டியை விட குறைவான அளவில், ஆனால் தற்போதுள்ள அளவை விட மேலும் அதிகமான கிகா பைட்டுகளுடன், சுமார் 1000 பாரன்ஹீட் வெப்பத்திலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த 3டி மெமரி சிப்பின் விசேஷமே என்கிறார் ஆய்வாளர் டூர். தற்போதுள்ள மெமரி சிப்களைக் காட்டிலும் அதிக பலன்களைக் கொண்ட இந்த 3டி மெமரி சிப் மின்னணுவியல் தொழில்துறைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.
மெமரி சிப் தெரியும். அதென்ன 3டி மெமரி சிப்?
தற்போதுள்ள மெமரி சிப்களில் இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற மின்னணுவியல் முறைப்படிதான் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் குறைவான பரப்பளவில் அதிக மெமரி அல்லது தகவல்களை சேமிக்க வேண்டுமானால், இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற இரு பரிமாண (2 D ) அளவுக்கு மேலாக மெமரி சிப்பின் உள்ளமைப்புகளை வடிவமைக்க வேண்டும். அதாவது 3டி அல்லது முப்பரிமாண நிலைக்குச் செல்ல வேண்டும். 3டி மெமரி சிப்பில் மூன்று முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற முறைப்படி மின்னணு தகவல்கள் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 3டி மெமரி சிப்கள் மிக அதிகமான on off ratio அளவுகளைக் கொண்டவை.
அதாவது, ஒரு மெமரி சிப் தகவல்களை சேமித்து வைத்து இருக்கும்போதும், காலியாக இருக்கும்போதும் எவ்வளவு மின்சாரம் அதனுள் பாய முடியும் என்பதை குறிக்கும் அளவுகோல்தான் இந்த on off ratio என்பது. அதிக on off ratio அளவுகளைக் கொண்ட சிப்களையே மெமரி சிப் தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, சிலிக்கான் ஆக்சைடு எனும் வேதியியல் பொருளுக்கு மேல் அதிசய பொருள் (miracle material) என்றழைக்கப்படும் மிக மிக மெல்லிய கிராபீன் அல்லது வேறு வகையான கார்பன் பொருளாலான படிவங்களைக் கொண்டதுதான் மெமரி சிப்.
மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன்தான் என்று பல காலமாய் நம்பிக்கொண்டிருந்தனர் மின்னணுவியல் விஞ்ஞானிகள். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறென்பது சமீபத்தில்தான் தெரியவந்தது.
அதாவது, மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன் அல்ல, சிலிக்கான் ஆக்சைடுதான் என்னும் அறிவியல் உண்மைதான் அது.
அது சரி, ஒரு மெமரி சிப் வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருப்பதால் என்ன பயன்?
ஒரு மெமரி சிப்பானது கண்ணாடி போல, வளையும் தன்மையுடன் சிறிய அளவில் இருப்பதால் பல விதமான பயன்பாட்டுக்கு உதவுகிறதாம். உதாரணமாக, தினசரி வாகன ஓட்டுதல், ராணுவ மற்றும் விண்வெளி வாகன பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சீ த்ரூ விண்ட் ஷீல்டுகளின்மேல் ஒட்டிக்கொள்ள வசதியாய் இருப்பதைச் சொல்லலாம். இதன்மூலம், இந்த 3டி மெமரி சிப்கள் தகவல்களை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல் வாகனங்களின் கண்ணாடியாகவும் பயன்படுகின்றன. ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதனால் இதர கருவிகளுக்கு தேவையான இட வசதியும் அதிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரசியமாக, கடந்த 2011 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் Russian Progress 44 cargo என்னும் விண்வெளி ஓடத்தில் இந்த அதிநவீன 3டி மெமரி சிப் பரிசோதனைக்காக பொருத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த விண்வெளி ஓடம் சைபீரியாவுக்கு மேலே சென்றுகொண்டிருந்த பொழுது வெடித்துச் சிதறிவிட்டது. இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர், அதிக கதிரியக்க சுற்றுச்சூழலைக் கொண்ட விண்வெளியில் இந்த 3டி மெமரி சிப்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை பரிசோதிக்க, வருகிற 2012 ஜூலை மாதம் மீண்டும் இவற்றை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
இண்டியம் டின் ஆக்சைடு மற்றும் கண்ணாடியால் ஆன தற்போதுள்ள டச் ஸ்கிரீன்கள் (தொடுதிரை) எளிதில் உடையும் தன்மை கொண்டவை. ஆனால், இந்த 3டி மெமரி சிப்களைக் கொண்ட பிளாஸ்டிக் தொடுதிரைகளைக் கொண்டு பழைய டச் ஸ்கிரீன்களை மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம், வளையும் தன்மையுள்ள உடையாத தொடுதிரைகளையும் மெமரி சிப்பையும் ஒன்றாக்கி விடலாம். இதனால் நமக்கு இட வசதி அதிகரிக்கிறது. இந்த இடத்தை ஸ்மார்ட்போனுக்கு தேவையான வேறு கருவிகள், அப்ளிக்கேஷன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பும் கிடைக்கிறது!
முக்கியமாக, ஸ்மார்ட்போனுக்கு தேவையான மெமரியை பெரிய மெமரி கார்டுகளில் சேமிப்பதற்கு பதிலாக டச் ஸ்கிரீன்களில் பொருத்தக்கூடிய அதி நவீன 3டி மெமரி சிப்களில் சேமிப்பதால், தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை மேலும் மெல்லியதாக மாற்றிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் பார்க்கும் படங்கள் முதல், வீட்டில் பயன்படுத்தும் டி.வி. வரை எல்லாம் 3டி மயமாகிவிட்ட இந்த காலத்தில், மெமரி கார்டுகள் மட்டும் 2 டியாகவே இருந்தால் நன்றாகவா இருக்கும்?!
அதனால், வருக 3டி மெமரி சிப்,
வாழ்க மின்னணுவியல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக