Posted By Muthukumar On Sep 11,2014
நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்கிப் பயன்படுத்த முதலில் டேபிளை இன்ஸெர்ட் செய்கிறோம். இதற்கு இன்ஸெர்ட் மூலமும் செல்லலாம்; அல்லது டேபிள் மெனு சென்று டேபிள் பிரிவில் கிளிக் செய்தும் மேற்கொள்ளலாம். அப்போது நமக்குக் கிடைப்பது என்ன? சிறிய கட்டங்களில் ஒரு சிறிய டேபிள். நாம் கொடுத்த எண்ணிக்கையில் நெட்டு வரிசையும் படுக்கை வரிசையும் இருக்கும். இது நிச்சயம் நாம் அமைக்க இருக்கும் தகவலுக்குச் சரியாக இருக்காது. எப்படி இதனைச் சற்றுப் பெரிதாக்கலாம். எளிய வழி ஒன்றை வேர்ட் அமைத்துள்ளது. கிடைத்த டேபிளை இந்தக் கண்ணோட்டத்துடன் கவனித்துப் பாருங்கள். இடது பக்கம் மேலாக மூலை மற்றும் வலது பக்கம் கீழாக மூலை – இவை இரண்டிலும் சற்று வித்தியாசமான முறையில் சுழிகள் காணப்படும். இவைதான் உங்களுக்கான திறவு கோல்கள். அதன் அருகே உங்கள் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர் சற்று வித்தியாசமான தோற்றத்திற்கு மாறும். அப்படியே மவுஸை இடது பட்டனில் அழுத்திப் பிடித்தவாறே இழுத்துவிடுங்கள். டேபிளில் கட்டங்கள் மற்றும் வரிசைகளின் அளவு மாறும். உங்கள் தேவைக்கு எந்த அளவு இருக்க வேண்டுமோ அந்த அளவில் வைத்து மவுஸை விடுவிக்கவும். இந்த அளவு போதவில்லை என்று எண்ணினால் மீண்டும் அதே போல் கர்சரைக் கொண்டு சென்று இழுத்து அமைக்கவும். இடது பக்கம் மேலாக உள்ள இடத்தில் மவுஸை இழுத்து விட்டால் டேபிளை எந்த இடத்தில் அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைக்கலாம்.
வண்ணங்களில் டேபிள் உருவாக்கம்: வேர்ட் பயன்படுத்துகையில் நம் ஆவணங்களில் நிச்சயமாய் டேபிள்களை உருவாக்கி நாம் சொல்ல வந்ததைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் காட்ட விரும்புவோம். பலர் முதலில் டேபிள் தரும் ஒரே கட்ட அமைப்பில் மட்டுமே டேபிள்களை அமைக்கின்றனர். டேபிள்களை பல வகைகளில் கண் கவரும் வகையில் அமைக்கலாம். ஒரு சில ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்தால் இது கிடைக்கும்.
முதலில் டேபிளை அதன் சாதாரண கோடுகளில் உருவாக்கிவிட்டுப் பின் அவற்றிற்கு அழகான வடிவம் கொடுக்கலாம். என்ன மாதிரி வடிவங்கள் உள்ளன. அவை எப்படி தோற்றமளிக்கும் என வேர்ட் முன் மாதிரியாகக் காட்டிவிட்டு பின் நாம் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைத்துக் கொடுக்கும். குறிப்பாக அச்செடுக்கையில் இவை அழகாகத் தோற்றமளிக்கும். இவற்றை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்?
முதலில் ஒரு டேபிளை உருவாக்குங்கள். பின் கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table Auto Format என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல பிரிவுகளில் டேபிள் எப்படி தோற்றமளிக்கும் எனக் காட்டப்படும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். டேபிள்களுக்கான நிறைய ஸ்டைல்கள் உங்களுக்கு ஆப்ஷனாகக் காட்டப்படும். இதனால் உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.
வேர்ட் புல்லட் பாயிண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும், கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும், புல்லட் பாய்ண்ட்ஸ் பயன் படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.